எண். 1, கிரீம்ஸ் சாலை,வணிகவரி அலுவலக இணைப்புக் கட்டிடம்,
சென்னை-600 006,
தொலைபேசி எண்கள் - +91-44-28297584-86/ 91-92 .
தொலைநகல் :- +91-44-28297769
மின்னஞ்சல் முகவரி :- coetnpsc.tn@nic.in contacttnpsc@gmail.com
|
தேர்வாணையம் வரவேற்கிறது
1923 ஆம்
ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியக் குடிமைப்பணியாளர்களின் ஊதிய விகிதத்தை
ஆய்வுசெய்யும் பொருட்டு ஒரு பொதுப்பணியாளர் தேர்வுக் குழுவை ஏற்படுத்தியது.
லீ
பிரபுவை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட இந்தக்குழு நான்கு ஆங்கிலேயர்களையும் நான்கு
இந்தியர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. இந்தியக் குடிமைப்பணி, இந்தியக்
காவல் பணி ஆகியவற்றில் இந்தியர்களுக்கான இடம் குறித்தும் இந்தக் குழு ஆய்வு
மேற்கொண்டது.
பதினைந்து ஆண்டுகளில் இந்தியக் குடிமைப்பணியில் இந்தியர்களின்
பங்கெடுப்பு ஐம்பது விழுக்காடாகவும் இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியக் காவல்
துறையில் இந்தியர்களின் பங்கெடுப்பு பதினைந்து விழுக்காடாகவும் அமையும் வகையில்
இந்தியர்களின் பங்கெடுப்பு விகிதத்தை இந்த லீ குழு நிர்ணயித்தது.
தங்களுக்கு சரியெனப்படும் வகையில், பொதுப்பணிகளுக்கான
பணியாளர்களை தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல் ஆகியவை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம்
பெரும்பாலும் தொடர்புடைய மாகாண அரசுகளிடமே வழங்கப்பட்டது. மேற்படி விருப்பார்ந்த
அதிகாரத்தினைக்கொண்டு, மதராஸ்
மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் தங்களுக்கென தனியான தேர்வாணையங்களை அமைப்பதற்கான
முயற்சிகளை முன்னெடுத்தன.
இவ்வகையில் 1929 ஆம் ஆண்டு மதராஸ் மாகாண சட்டமன்றத்தின் சட்டத்தின்படி
மதராஸ் தேர்வாணையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்முறையாக
தேர்வாணையம் அமையப்பெற்ற மாகாணம் எனும் தனிப்பெருமையை மதராஸ் மாகாணம் பெற்றது.
மதராஸ் தேர்வாணையம் தலைவர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக்கொண்டு செயல்படத்
தொடங்கியது. 1957 ஆம்
ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப்பின் பல்வேறு
தேர்வாணையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
1957 ஆம் ஆண்டு மதராஸ் தேர்வாணையம் சென்னையைத்
தலைமையிடமாகக்கொண்டு மதராஸ் பணியாளர் தேர்வாணையம் எனப் பெயர் பெற்றது. 1969ஆம்
ஆண்டு மதராஸ் மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தின்
பெயரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் என மாற்றம் பெற்றது.
தங்களுடைய இன்றியமையாமை மற்றும் பாரபட்சமின்மை
ஆகியவற்றின் விளைவாக அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் இந்தியாவின் அரசியலமைப்புச்
சட்டத்தில் சிறப்பினைப் பெற்றுள்ளன. அரசுப்பணியாளர் தேர்வாணையங்களின் பல்வேறு
பணிகள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 16, 234, 315 - 323 ஆகியவற்றில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்
செயல்பாடுகள் 1954ஆம்
ஆண்டைய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய ஒழுங்கு முறை விதிகள் மற்றும் நடைமுறை
விதிகள் ஆகியவற்றால் வழி நடத்தப்படுகிறது.