பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 என்று பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியது முதலே துயரம் தொடங்கி விட்டது. விலை உயர்வுக்கு முதலில் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் பறறாக்குறை என்ற புதிய பிரச்சினை கிளம்பியது.
சென்னையில் கடந்த 5 நாட்களாக இருப்பு இல்லை என்ற அறிவிப்பு போர்டு தான் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் முன்பு காட்சி அளிக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பங்க்குகளில் 50-க்கும் குறைவான பங்க்குகளே நேற்று இயங்கின. மற்றவை எல்லாம் மூடப்பட்டு விட்டன. சென்னை நகரில் தொடங்கிய இந்த பங்க் அடைப்பு புறநகர்களுக்கும் பரவி அங்கும் ஏராளமான பங்குகளை மூடி விட்டனர்.
பெட்ரோலுக்காக வாகன ஓட்டிகள் அங்கும், இங்கும் அலைந்து திரிய நேரிட்டுள்ளது. திறந்திருந்த சில பங்குகளிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைப பார்க்க முடிந்தது.
5 நாட்களாக தொடரும் இந்த பிரச்சினைக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தை கேட்டால், எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். இருப்பினும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் வேண்டும் என்றே இந்த செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். விலை ஏற்றத்தை எதிர்த்த மக்கள் வாயிலிருந்து, விலையை வேண்டுமானால் ஏற்றி விட்டுப் போ, ஆனால் பெட்ரோல் தராமல் இருக்காதே என்ற வார்த்தை வர வேண்டும் என்பதற்காகவே இப்படி அவர்கள் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விலை ஏற்றப்படுவதற்கு முதல் நாள் வரை பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படாததை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதெப்படி திடீரென பற்றாக்குறை ஏற்படும் என்றும் மக்கள் கேட்கிறார்கள்.
இதற்கிடையே டீசல் தட்டுப்பாட்டைப் போக்க சென்னைக்கு இன்று கப்பல் மூலம் 67 ஆயிரம் கிலோ லிட்டர் டீசல் வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில செயல் இயக்குனரும், தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் நிறுவன மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளருமான வி.கே.ஜெயச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக உணவுத்துறை செயலாளர் எம்.பி. நிர்மலா தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உணவுத்துறை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும், எண்ணெய் நிறுவன மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
தமிழ்நாட்டில் டீசலுக்கான தேவை கணிசமாக அதிகரித்து உள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் முறையே 25.2 சதவீதம், 25.7 சதவீதம், 19.5 சதவீதம் அளவுக்கு டீசலின் தேவை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அகில இந்திய அளவில் சராசரியாக 8 சதவீதம் அளவுக்கே டீசல் தேவை அதிகரித்து இருக்கிறது.
மே மாதத்தில் சுமார் 20 சதவீதத்திற்கு டீசல் தேவை அதிகரித்துள்ளது. ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக டீசல் அதிகளவு பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம்.
டீசலில் பெரும்பாலான அளவு சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், கடைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்கள் சில்லரை விற்பனை நிலையங்களில் இருந்தே டீசலைப் பெறுகின்றன.
விலை உயர்ந்த பர்னஸ் ஆயிலைவிட டீசல் விலை குறைவாக இருப்பதால் தொழிற்சாலைகள் டீசலை அதிகம் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் டீசலுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சி.பி.சி.எல்.) கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை மூடப்பட்டதாலும், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் (எம்.ஆர்.பி.எல்.) கடந்த ஏப்ரல் 12-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மூடப்பட்டதாலும் டீசல் இருப்பு குறைந்தது.
இதனால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் டீசல் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழகத்தின் அதிக டீசல் தேவையை கருத்தில் கொண்டு மற்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கப்பல் மூலம் டீசல் கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.
டீசல் தேவை அதிகரித்திருப்பதால் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் கப்பலில் அனுப்பியுள்ள டீசல் செவ்வாய்க்கிழமை சென்னை வந்து சேரும். அதுபோல ஐ.ஓ.சி.எல்., எச்.பி.சி.எல். நிறுவனங்கள் கப்பல் மூலம் அனுப்பியுள்ள டீசலும் இன்று சென்னை வந்தடையும். கப்பல்களில் வரும் டீசலின் மொத்த அளவு 67 ஆயிரம் கிலோ லிட்டர் ஆகும்.
இத்தகைய நடவடிக்கைகளால் சென்னை மாநகரின் டீசல் தேவை பூர்த்தியாகி, நிலைமை சீரடையும். எனவே, டீசல் பயன்படுத்துவோர் தங்களது தேவைக்கு மேல் டீசலை வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் சிவில் சப்ளை துறையும் டீசல் பதுக்கி வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும். அதையும் மீறி டீசலைப் பதுக்கிவைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
வந்தது கப்பல்
இந்த நிலையில் கொச்சியிலிருந்து பிரதீபா வர்ணா என்ற கப்பல் மூலம் டீசல் சென்னைக்கு இன்று வந்து சேர்ந்தது. இந்த டீசலை இறக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மொத்தம் மூன்று கப்பல்களில் டீசல் சென்னைக்கு வருகிறது.
டீசல் வந்துள்ளதைத் தொடர்ந்து படிப்படியாக டீசல் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment