நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியானது மமதா பானர்ஜி ரூபத்தில் சோதனையை எதிர்கொண்டிருப்பதைப் போலவே
43 ஆண்டுகளுக்கு முன்பும் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சோதனையில்
சிக்கித் தவித்தது. மேலும் தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலுடன் ஐக்கிய
முற்போக்குக் கூட்டணியானது சிதறுவது தவிர்க்க முடியாதது என்றும் அரசியல்
பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
வரலாறு திரும்புகிறது...
நாட்டின் 3-வது குடியரசுத் தலைவராக இருந்த ஜாஹிர் உசேன்
1969-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி காலமானார். அவரைத் தொடர்ந்து குடியரசு துணைத்
தலைவராக இருந்த வி.வி.கிரி இடைக்கால குடியரசுத் தலைவராக இருந்தார். அடுத்த
குடியரசுத் தலைவராக யாரை நியமிக்கலாம் என காங்கிரசில் இப்போது போலவே படு சீரியசாக
விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியானது அப்போது சபாநாயகராக இருந்த நீலம்
சஞ்சீவ ரெட்டியை அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தியது. நீலம் சஞ்சீவ ரெட்டி
சொந்தமாக செயல்படக் கூடியவர் என்பதால் அப்போது இந்திரா காந்தி அம்மையார் கடும்
ஆட்சேபத்தில் இருந்தார். அத்துடன் மட்டுமல்லாமல் குடியரசு துணைத் தலைவராக இருந்த
விவி கிரியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை
எதிர்த்தும் களமிறக்கினார்.
இதே நிலைமைக்கு ஒத்த ஒரு நிலைமைதான் காங்கிரசுக்கு
ஏற்பட்டுள்ளது! அன்று காங்கிரசுக்குள் இருந்த இந்திரா காந்தி கலகக் குரல் எழுப்பி
போட்டி வேட்பாளரை நிறுத்தினார். இன்று காங்கிரஸ் கூட்டணிக்குள் இருக்கும் மமதா
பானர்ஜி காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கருதப்படுகிற பிரணாப்புக்கு எதிராக
போர்க் கொடி தூக்கியிருக்கிறார்.
அதெல்லாம் சரி.. முடிவு எப்படியாக அன்று இருந்தது!
இந்திரா காந்தி நிறுத்திய வி.வி.கிரிக்கு 4,01,515 வாக்குகள் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி நிறுத்திய அதிகாரப்பூர்வ வேட்பாளர் நீலம்
சஞ்சீவரெட்டிக்கு 3,13,548 வாக்குகள் கிடைத்தன!
ஒருவேளை தற்போதைய நிலவரப்படி மமதா முன்னிறுத்தும்
அப்துல்கலாம் பிரணாப்பை எதிர்த்து நிறுத்தினால் வரலாறு திரும்பும் என்றுதான்
சொல்லப்படுகிறது! காங்கிரஸ் கூட்டணிக்குள் இருக்கும் திமுக நிச்சயமாக கலாமை
எதிர்த்து வாக்களிக்க வாய்ப்பே இல்லை! கலாம் ஒரு தமிழர் அதுவும் சிறுபான்மை
சமூகத்தவர் என்பதால் அதிமுகவும் திமுகவும் நிச்சயம் கலாமை ஆதரிக்கும்! இது
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளருக்கு நிச்சயம்
பெரும் பின்னடைவாகவே கருதப்படும்!
அப்படியானால் இதுதான் வரலாறு திரும்புகிறது என்பதோ?
அப்படியானால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இந்த
குடியரசுத் தலைவர் தேர்தலுடன் மூடுவிழாவோ?
இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடை கிடைக்கும் நாள்
விரைவில்தான்...
No comments:
Post a Comment