Tuesday, June 19, 2012

ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்போது மக்களை முற்றுகையிடும் 30 கேள்விகள்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்போது தாங்கள் எந்த ஜாதி என்று சொல்வதில் யாருக்கும் தயக்கமோ, கூச்சமோ இல்லை

டந்த மே மாதம் சென்னையில் துவங்கிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் பத்தாம் தேதி முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எப்படி எடுக்கப்படுகிறது? மக்கள் இதற்கு எப்படி பங்களிக்கிறார்கள்? ஒரு நேரடி ரிப்போர்ட் இதோ...

நாம் சென்ற இடம் சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்னமலை ஆரோக்கியமாதா நகர் குடிசைப்பகுதி. சுமார் ஆறு செண்ட் அளவே உள்ள இந்தப் பகுதியில் 50 வீடுகளில்200 பேர் வசிக்கிறார்கள். கணக்கெடுப்பு எடுக்கும் அதிகாரி மற்றும் அவரது உதவியாளரும் வீடு வீடாகச் சென்று விவரங்களை பதிவு செய்தார்கள். கணக்கெடுப்பை பதிவு செய்ய ஒரு டேப்லட் கணினி அதிகாரியிடம் வழங்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த 30 கேள்விகளில் 4 கேள்விகள் மட்டுமே ஜாதி தொடர்புடையது. எஸ்.சி., எஸ்.டி., தவிர மற்ற ஜாதியினர், ‘மற்றவைஎன்ற பிரிவின்கீழ் குறிக்கப்படுகின்றனர்.ஜாதி இல்லைஎன்ற பிரிவும் உள்ளது. தங்கள் ஜாதியை சொல்ல விரும்பாதவர்கள் இந்தப் பிரிவில் வருவார்கள்.

மீதமுள்ள 26 கேள்விகளில் பெயர், பாலினம், திருமணமானவரா போன்ற அடிப்படைக் கேள்விகள்.இதர கேள்விகள் சமூகப் பொருளாதாரம் தொடர்புடையவை. எத்தகைய வீட்டில் தங்கி இருக்கிறார்? மாடி வீடா? ஓட்டு வீடா?குடிசை வீடா மற்றும் குடிதண்ணீருக்கு அரசு வழங்கும் தண்ணீரா?கேன்களா? கழிவறை இருக்கிறதா? இருந்தால் வீட்டுக்குள் இருக்கிறதா? வெளியே இருக்கிறதா போன்ற கேள்விகள்.

செல்போன், ஃப்ரிஜ், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவை இருக்கின்றனவா என பொருளாதார ரீதியாக சில கேள்விகள். நாம் நேரடியாகப் பார்த்தவரையில் மக்கள், அதிகாரிகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்கள். தாங்கள் எந்த ஜாதி என்று சொல்வதில் யாருக்கும் எந்தத் தயக்கமும், கூச்சமும் இல்லை. எல்லோரும் தைரியமாக முன் வந்து சொல்கிறார்கள். இதில் மேல்தட்டு, அடித்தட்டு என்ற பாகுபாடெல்லாம் இல்லை.

"சிலர் தங்கள் ஜாதி தெரியவில்லை என்று சொன்னது ஆச்சரியமான அனுபவம்" என்கிறார் கணக்கெடுத்த அதிகாரி ஒருவர். கலப்புத் திருமணமோ, காதல் திருமணமோ செய்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணவனின் ஜாதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் யாருமே, ‘ஜாதி இல்லைஎன்று சொல்ல முன்வரவில்லை.

ஓரிருவர் மட்டுமே, ‘ஜாதி வேண்டாம்என்று தங்கள் ஜாதியை சொல்ல மறுக்கிறார்கள்.அவர்களும் மேல்தட்டு மக்கள். ஜட்ஜ் காலனியில் "என் ஜாதி என்ன என்று கேட்பது சட்டப்படி குற்றம்" என ஒருவர் சண்டை போட்டார்.

மக்களிடம் கேட்கப்பட்ட 30 கேள்விகள் ஜாதிக் கணக்கை மட்டும் காட்டுவதாக இல்லை. அவை மூன்று வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒன்று - உண்மையிலேயே எந்த ஜாதி பொருளாதார ரீதியில் வளர்ந்திருக்கிறது என்பதும் எந்த ஜாதி மக்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்பதும் இந்தக் கண்கெடுப்பின் மூலம் வெட்ட வெளிச்சமாகும்.
இரண்டு - எத்தனை பேர் அரசுவழங்கும் குடிநீரைப் பயன்படுத்துகிறார்கள். யார் யாரிடம் செல்போன் இருக்கிறது. கழிப்பறையில்லாத வீடுகள் எத்தனை போன்ற புள்ளி விவரங்கள் துல்லியமாகத் தெரியவரும்.
மூன்று - உண்மையிலேயே கிராமங்களை எல்லா வசதிகளும் எட்டி இருக்கிறதா என்பதும் கிராமங்களின் வளர்ச்சி எந்த அளவு உள்ளது என்பதையும் கணக்கிட முடியும்.

சொல்லாதே யாரும் கேட்டால்!

சாதிகள் இல்லையடி பாப்பா’-என்ற பாரதியின் பாடலைகற்றுக் கொடுக்கும் பள்ளிகளில்தான் இன்றும் குழந்தைகளை சேர்க்கும்போது ஜாதி, மதம் ஆகியவற்றை சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் பெற்றோர்களில் சிலர், ஜாதி, மதத்தைக் குறிப்பிட மறுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள பல பள்ளி நிர்வாகங்கள் தயாராக இல்லை. இதுபோன்ற சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு ஓர் ஆணை பிறப்பித்திருக்கிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அரசுச் செயலர் வெளியிட்டுள்ள அந்த ஆணையில், ‘இடைநிலை பள்ளிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் சேர்க்கைப் படிவம் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரும் விரும்பினால் அவ்வாறே செய்யும் உரிமையை பெற்றோர்களுக்கு அளிக்கலாம்.

மேலும் பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர்கள் விருப்பப்படாவிட்டாலும், தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி சமயக் குறிப்பு தேவையில்லைஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நகல் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இப்போது பிள்ளைகளை சேர்க்கும் காலம். ஜாதி, மதக் குறியீடுகளை விரும்பாத பெற்றோர்கள், பள்ளிகளில் இந்த அரசாணை குறித்து எடுத்துச் சொல்லி, பிள்ளைகளைச் சேர்த்து ஜாதி, மதம் இல்லாத ஒரு புதிய சமூகம் படைக்கலாம்!
புதியதலைமுறை

No comments:

Post a Comment