வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.
ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.
அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.
கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும்
பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.
பிறக்கும் போதே அதிக எடை சாதாரணமாக கொடி ஆட்டுக்குட்டி பிறக்குற போது ஒன்றரைக் கிலோ தான் எடை இருக்கும். எட்டு மாசத்துல தான் பதினைஞ்சு கிலோ எடைக்கு வரும். இதுவே கலப்புக் குட்டிகள்னா… பிறக்குறப்பவே ரெண்டரை கிலோ இருக்கும். நாலு மாசத்துலயே பத்து கிலோவுக்கு மேல எடை வந்துடும். எட்டு மாசத்துல முப்பது கிலோ வரைக்கும் கூட வந்துடும். பொதுவா பத்து பன்னெண்டு கிலோ இருக்கிற ஆட்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபா வரைக்கும் விலை கிடைக்கும். கொறஞ்சது ஆறு மாசமாவது கொடி ஆட்டை வளர்த்தாதான் அந்த விலை கிடைக்கும். ஆனா, கலப்பின ஆட்டுக்கு நாலு மாசத்திலேயே இந்த விலை கிடைக்கும்’ என்று ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.
1 ஆட்டுக்கு 15 சதுரடி!
வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும். பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.
தண்ணீர் கவனம்!
காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்
வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.
இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும். எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டுக் குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.