Wednesday, February 22, 2012

வரைகலை கேலிச்சித்திரங்கள்….ஒரு ஆயுதம்

கேலிச்சித்திரம் எப்படி வந்தது?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது


நோக்கம்

கேலிச்சித்திரங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் கருத்துப்படம்

தமிழ்நாட்டில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்


ஊடகங்களில் கேலிச்சித்திரங்களுக்கு என்று ஒரு தனி இடமுண்டு. ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு ஓவியரின் நேர்த்த்தியான கோடுகள் ஓரிரு நொடிகளில் உணர்த்தி விடும். ஆனால் அதைச் சாதிப்பதற்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், ஓர் அரசியல்வாதிதயின் சாராம்சமான பண்பையும் புரிந்து கொள்ளும் அரசியல் கூர்மதி ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு வேண்டும்.

அரசியல்வாதியிடம் அந்தப் பண்பு வெளிப்படும் தருணத்தை சிக்கெனப் பற்றி தனது கோடுகள் மூலம் வாசகன் மனதில் அதை வரைந்துவிடும் ஆற்றல் கொண்ட பிசிறற்ற தூரிகை வேண்டும்.
கதைகள், உவமானங்கள், உருவகங்கள், தொன்மங்கள், பழமொழிகள், மக்கள் வழக்குகள் ஆகியவற்றைச் செறிவாகக் கையாளும் சொல் திறனும், கலைத்திறனும் இணைந்திருக்க வேண்டும்.

எல்லாம் இருந்தாலும் பத்திரிக்கை முதலாளி நாசுக்காகத் தரும் நிர்ப்பந்தங்களையும், கேலிக்குள்ளான ஓட்டுப் பொறுக்கிகள் விடுக்கும் மிரட்டலையும், அன்பளிப்புகளையும் நிராகரித்து நிற்கின்ற நேர்மையும் துணிவும் வேண்டும். ஆனால் இன்றைய ஊடகங்களின் கேலிச்சித்திரக்காரரகள் எவரும் இந்த துணிச்சலைத் தம் தூரிகைகளில் வரைவதில்லை.

அரசியல்வாதிகள், முதலாளிகளின் தோற்றத்தையே கேலி செய்வதையே ஆளுமையைக் கேலி செய்வதாகக் கருதிக் கொள்ளும் பாமரத்தனம்; ஆரம்பப் பள்ளிகளில் பாடநூலின் விளக்கப் படத்தையொத்த விமரிசனமற்ற ஆளும் வர்க்க்க் கருத்துப் படங்கள்; சூத்திர அரசியல்வாதிகள் மீதான மேட்டுக்குடியின் வெறுப்பையும், அந்த வர்க்கத்தின் அரசியலற்ற அகம்பாவத்தையும் வெளியிடும்  கேலிச் சித்திரங்கள்; பத்திரிகை முதலாளி வழங்கும் சம்பளம் எனும் கத்தரிக்கோலை மூளையில் வைத்துத் தைத்துக் கொண்ட தூரிகைக் கையாட்கள்….

இதுதான் இன்றைய முதலாளித்துவப் பத்திரிகையுலகின் பின்புலம். அரசியல் உலகில் இருக்கும் சந்தர்ப்பவாதமும், பிழைப்பு வாதமும், கோழைத்தனமும்தான் இன்றைய பத்திரிகை உலகின் கார்ட்டூன்களை வடிவமைக்கின்றன.


p_chidambaram_t

No comments:

Post a Comment