Saturday, June 30, 2012

தொலைக்காட்சிப்பெட்டியின் பரிணாம வளர்ச்சி



விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதனை எப்படி

மாற்றியுள்ளது என்பதை இந்த கேலிச்சித்திரம் அழகாக , நகைச்சுவையாக .....

Saturday, June 23, 2012

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!


பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?

பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம்.

மனதில் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கற்பனை கோட்டைகளை எழுப்பிவிட்டு இந்தியர்கள் வளைகுடா நாடுகளை நோக்கி பறக்கின்றனர். சூட்டினால் தகிக்கும் பாலைவன மண்ணில் ஒரு பூலோக சுவர்க்கத்தை தங்களது வாழ்க்கையில் கட்டலாம் என்ற நம்பிக்கையில் தாயகத்தை துறந்து அந்நிய தேசத்திற்கு செல்லுகின்றனர். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தாம் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள் ஒவ்வொன்றாக தென்பட துவங்குகிறது.

வானமும், பூமியும் கைவிட்ட உலகம். நதிகளும், வயல் வரப்புகளும், மரங்களும், கிளிகளும் இல்லாத நாடு. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வந்தால் மண்டையை பிளக்கும் சூடு. இதனை விட சொந்த ஊரையும், குடும்பத்தையும் பிரிந்த வேதனை. மேலும் அவர்களது பாதுகாப்புக் குறித்த கவலை.

ஒரு மரத்தைப் பறித்து இன்னொரு நாட்டில் கொண்டு போய் நட்டால் ஏற்படும் அதே நிலைமைதான் வளைகுடா வாழ் இந்தியர்களின் நிலைமையும்.

மாறிய காலச்சூழலுடன் ஒத்துப்போகாத உடல்நிலை அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறுகிறது. காற்று, நீர், உணவு இவற்றில் ஏற்படும் திடீர் மாற்றம் செடி கொடிகளைப் போலவே அவர்களது மனமும் வாடிப்போகிறது. இந்த வாட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்து போவோரும் உண்டு.

கவலைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் அவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்தைக் குறித்து மறந்து போகின்றார்கள். முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கை முறை வளைகுடா வாழ் இந்தியர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.

சிண்ட்ரோம் எக்ஸ்
வளைகுடா வாழ் இந்தியர்களை காத்திருக்கும் நோய்களின் கூட்டுப் பெயர் தாம் சிண்டோம் எக்ஸ். இதனை செல்லப் பெயர் என நீங்கள் கருதினாலும் தவறில்லை.

நீரழிவு (சர்க்கரை வியாதி), கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்கள் அடங்கியதுதான் சிண்ட்ரோம் எக்ஸ். இவையெல்லாம் வாழ்க்கை முறை மாறுவதால் உருவாகும் நோய்களாகும். மிக விரைவில் வளைகுடா வாசிகள் இந்த நோய்களின் பிடியில் சிக்கிவிடுகின்றார்கள்.

வாழ்க்கை முறை ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை இதில் இருந்தே விளங்கிக் கொள்ள முடியும்.

வளைகுடா வாசிகளின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் உடலின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக பாதிக்கும் வேளையில்தான் நோய்களும் ஒவ்வொன்றாக குடிக்கொள்கிறது.

சொந்த உடல்நிலைக் குறித்து அவர்களில் பெரும்பாலோர் கவலைப்படுவதில்லை. இவ்வாறு சிண்ட்ரோம் எக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை கழிக்கின்றார்கள் வளைகுடா வாசிகள்.

வளைகுடா வாசிகளை(வளைகுடா வாழ் இந்தியர்களை) நோயில் தள்ளும் காரணிகள்

மனச்சோர்வு (depression) நோய்களை உருவாக்கும் மனோரீதியான பிரச்சனைகள்

நாட்டையும், வீட்டையும் துறந்து செல்லும் இந்தியர்களை முதலில் பாதிப்பது நெருக்கடிகளாகும். குடும்பத்தைக் குறித்த கடுமையான கவலை, புதிய இட சூழலுடன் பொருந்திப் போவதில் ஏற்படும் சிரமம், பணி இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகள், பணிச் சுமை, வேலையில் அதிருப்தி, தனிமை ஆகியன மனநெருக்கடிகளை உருவாக்குபவையாகும்.

ஓய்வு, உல்லாசம், நிம்மதியான உறக்கம், உடற்பயிற்சி, நட்புறவுகள் இவற்றையெல்லாம் புதிதாக வளைகுடா செல்லும் நபர் இழக்கவேண்டிய நிலைமை உருவாகிறது.

மன நெருக்கடிகளுக்கு ஆளாகும் சிலர் நிம்மதியை தேடுவதாக கூறி புகை, மதுபானம் போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போகின்றனர். உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் மன நெருக்கடிகளின் பலன் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.

மனோரீதியான நெருக்கடிகள் காரணமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் நோய்கள் ஒவ்வொன்றாக வளைகுடா வாசிகளை பாதிக்கத் துவங்கின்றன.

வளைகுடா வாழ் இந்தியர்களில் ஒரு குறிப்பிட சதவீதம் பேர் மனச்சோர்வால் (depression) பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோர் இத்தகைய மனச்சோர்வுக்கு உரிய சிகிட்சையை பெற முயலுவதில்லை.

மன ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் வேளையில் குடும்பத்தினரின் ஆதரவும், ஆறுதலும் கிடைக்காமல் போகும் பொழுது அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலும் இதன் இறுதி முடிவு தற்கொலையில் சென்று முடிவடைகிறது.

வளைகுடா நாடுகளில் தற்கொலை செய்வோரில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர் என புள்ளிவிபரம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:

1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியனவாகும்.

சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.

எதற்கும் தீர்வு காணமுடியாத சூழல் உருவாகும் பொழுது தற்கொலையில் அபயம் தேடுகின்றார்கள். மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து முன்னரே அறிந்திருந்தால், அவற்றை கையாளும் பக்குவமும், பொறுமையும் இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். தற்கொலை எந்தப்பிரச்சனைக்கும் தீர்வு அல்ல என்ற புரிந்துணர்வு வேண்டும். இத்தகைய நபர்கள் மட்டுமே கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது சிறந்தது. அவ்வாறு இல்லையெனில், சொந்த நாட்டிலேயே தொழில் புரிந்து கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதுதான் உசித்தம்.

உணவு பழக்க வழக்கம்

சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது என்பதுதான் சரியான காரணம்.

இட்லி-சாம்பார், தோசை-சட்னி, இவையெல்லாம் வளைகுடாவாசிகளில் பெரும்பாலோருக்கு கனவாக மாறிவிடுகிறது. காய்கறிகள் இங்கே கிடைக்காமலா உள்ளது? ஆனால், வேலை முடிந்து சோர்வாக வரும் பொழுது காய்கறிகளை நறுக்கி, தேங்காயை துருவி உணவு சமைக்க அலுப்புத் தோன்றும். ஆகவே குக்கரில் சாதம் தயாரித்து, ஏதேனும் ஒரு குழம்புடன் முடித்துக்கொள்ளும் போக்கே பெரும்பாலோரிடம் காணப்படுகிறது.
அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது சிக்கன் கறியாகும். தயாரிப்பதற்கு எளிது என்பதாலும், விலை மலிவு என்பது சிக்கனை தேர்வுச்செய்ய காரணமாகும். இதனை 2,3 நாட்கள் உபயோகிப்போரும் உண்டு. இவ்வாறு சிக்கன் அன்றாட வாழ்க்கையின் உணவாக மாறுகையில் கொலஸ்ட்ரோல் சிண்ட்ரோம் உடலை ஆளத்துவங்கும்.

வளைகுடாவாசியின் உடல் எடைபோட்டு க்ளாமர் முகத்தில் தெரிந்தாலே புரிந்துகொள்ளலாம் இது சிக்கனின் கொழுப்பு என்பதை. அதிக வருமானம் உடையோர் மீன் வகைகளை உண்பார்கள். இதுவும் கொலஸ்ட்ரோலை கை நீட்டி அழைக்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. காரணம் மாமிச உணவின் கொழுப்பை குறைக்க நார்ச்சத்துள்ள காய்கறிகளை இவர்கள் உபயோகிப்பதில்லை. இவ்வாறு பெரும்பாலோர் அதிக உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.

சிக்கன் உணவின் அளவுக்கதிகமான உபயோகத்தால் மூல நோயால் அவதியுறுவோரும் உண்டு. மேலும் சுத்தமான குடிநீரை தேவைக்கேற்ப அருந்தாதும் இப்பிரச்சனையை உருவாக்குகிறது. கோடை காலங்களில் சூட்டையும், தாகத்தையும் தாங்கமுடியாமல் கிடைத்த பானங்களை வாங்கி அருந்துவதால் சிறுநீரக கல்லும், மஞ்சள் காமாலை நோயும் உருவாக காரணமாகிறது.

உணவும், உறக்கமும் முறை தவறும் பொழுது

10-18 மணிநேரம் தொடர்ச்சியாக பணியாற்றும் சூழல் ஏற்படும் இவர்களுக்கு குறிப்பிட நேரத்தில் உணவு சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. ஸ்நாக்சும், ஏதேனும் கோலாக்கள் மூலமாக தற்காலிக பசியை அடக்குவோரும் உண்டு. ஏதேனும் ஒரு வேளையில் இவர்கள் வயிறு முட்ட சாப்பிடுவார்கள். இது உடல் நலனுக்கு கேடானது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இன்னும் சிலர் உண்டு. அவர்களுக்கு காலை உணவே கிடையாது. பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்போர் காசை மிச்சம் பிடிக்கவே இந்த வழியை கையாளுகின்றனர். இரவு தாமதமாக உணவை உண்டு, காலையில் தாமதித்து எழுந்து மதிய உணவை சாப்பிட்டால் காலை உணவை தவிர்க்கலாம் என்ற கொள்கையை சிலர் வகுத்து வைத்துள்ளனர்.

உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் சூழலில் சிலர் காசை சேமிப்பதற்காக தங்களது உடல் ஆரோக்கியத்தை பலி கொடுக்கின்றனர்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம். நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில் வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான். இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில் உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேசன் போல் கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக மாறிவிடும். நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி) போன்ற வாழ்க்கை முறையினால் உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.

ஓய்வில்லாத பணி!

பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும். அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.

முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.

நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.

ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!

பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும், புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.

கடுமையான வெப்பம்

வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.

கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.

பெனடால் என்ற உற்றத்தோழன்

வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல் மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா? ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.

வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும் சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள் எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன் எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.

பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல் மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.

இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.

உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.

இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!

செய்யதுஅலீ

Friday, June 22, 2012

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...
முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது.

இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும்.

இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும்.

மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.
 
ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...
கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.

கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.
தொலைபேசி எண்: 044-28594780
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது.
 இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது.

அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.
இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31-7-2012
விவரங்களுக்கு: www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm
இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30-09-2012
விவரங்களுக்கு: http://www.momascholarship.gov.in/
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மை அமைச்சகம் தனியே சிறப்புக் கல்வி உதவித் தொகையை (Merit cum means based scholarship) வழங்குகிறது.
அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொழில் அல்லது தொழில் நுட்பப் படிப்புகளில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.
போட்டித் தேர்வுகள் மூலம் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் பெற்றவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

படிப்புக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30-09-2012
உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தின் அச்சு நகலை நிறுவனத்தில் சமர்பிப்பதற்குக் கடைசி தேதி: 5-10-2012
மேலும் விவரங்களுக்கு: http://www.minorityaffairs.gov.in/
மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை
மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
 அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி. இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு: http://www.nhfdc.nci.in/
அறிவியல் படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
பிளஸ் டூ வகுப்பில் படித்த திறமையான மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research - INSPIRE)  என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இயற்கை மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எர்த் சயின்சஸ் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., பி.எஸ்சி., ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிக்கல்ச்சுரல் சயின்சஸ், எலெக்ட்ரானிக் சயின்சஸ், மெடிக்கல் அண்ட் பயோ மெடிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவு மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.
இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படும் அறிவியல் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் கோடை காலத்தில் ஆய்வு மையங்களில் திட்டங்களை மேற்கொண்டால் அந்தக் காலத்திற்குத் தனியே ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். அதேசமயம், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.
மத்திய அல்லது மாநில 12ம் வகுப்புக்கான போர்டு தேர்வுகளில் முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஏஐஇஇஇ., அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள் வந்து தற்போது அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
நேஷனல் டேலன்ட் எக்ஸாம், கேவிபிஒய்., ஜகதீஷ் போஸ் நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஸ், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களும் ஐஐஎஸ்இஆர்., என்ஐஎஸ்இஆர்., அணுசக்தித் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்புக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப மாதிரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலமும் அனுப்பலாம். அறிவியல் படிப்புகளைப் படிக்கும் தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.
விவரங்களுக்கு: http://www.inspire-dst.gov.in/
புத்தக வங்கிகள்
கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்:
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க்
4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி எண்கள்: 044-25610369, 25610978
ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி எண்: 044-24621110
ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி
6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040
தொலைபேசி எண்: 044-26206261