Thursday, May 10, 2012

அலர்ஜியை அதிகரிக்கும் நகர்புற வாழ்க்கை!

இயற்கைச் சூழலை அனுபவிக்காத நகர்ப்புற வாழ்க்கை காரணமாகவே பலருக்கு அலர்ஜி(ஒவ்வாமை) ஏற்படுவதாக பின்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
Allergy
மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் நகர்ப்புறம் சாராத பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில் அதிகம் காணப்படுவதாகவும், அத்தகைய சூழலில் வாழும் மனிதர்களுக்கு ஒவ்வாமை குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதேசமயம், அப்படியான பசுமை சூழலற்ற நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பயன் கிடைப்பதில்லை என்பதால் அத்தகையவர்கள் மத்தியில் ஒவ்வாமை அதிகரித்து காணப்படுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒவ்வாமை என்பது பல வகைப்படும். சிலருக்கு சில வகை உணவுகள் ஒவ்வாமையை தூண்டும். சிலருக்கு சிலவகை மருந்துகள் ஒவ்வாமையை தூண்டும். சிலருக்கு சிலவகை திரவங்களால் ஒவ்வாமை ஏற்படும். ஆனால் மனிதர்களில் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது என்கிற அடிப்படை கேள்விக்கு மட்டும் நீண்ட நாட்களாகவே மருத்துவரீதியான உறுதியான விடை கிடைக்கவில்லை.
அதிலும் குறிப்பாக இந்த ஒவ்வாமையானது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாதிக்கிறது என்பதால் இதற்கான பொது காரணிகள் என்ன என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தகைய ஆய்வு ஒன்றில் ஈடுபட்ட பின்லாந்து விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வின் முடிவுகளை அறிவியலுக்கான தேசிய அகாடமி சஞ்சிகையில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இயற்கைச் சூழலில் பல்வேறு வகையான மைக்ரோப்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகள் சுற்றுச்சூழலில் கலந்து காணப்படுகின்றன. ஆனால் பசுமையான இயற்கை சூழலில் காணப்படும் நுண்ணுயிரிகளுக்கும், மனிதர்கள் அடர்ந்து காணப்படும் நகர்ப்புற சூழலில் காணப்படும் நுண்ணுயிரிகளுக்கும் கணிசமான வேறுபாடு இருக்கிறது.
குறிப்பாக பசுமையான காடுகள் மற்றும் வயல்வெளிகளில் மனிதனுக்கு நன்மை பயக்கும் பலதரப்பட்ட நுண்ணுயிரிகள் கலந்து காணப்படுகின்றன. ஆனால் நகர்ப்புறச்சூழலில் இப்படியான பலதரப்பட்ட நுண்ணுயிரிகள் இருப்பதில்லை. ஒரு சில நுண்ணுயிரிகளே இருக்கின்றன.
இதன் காரணமாக மனிதனுக்கு நன்மை பயக்கும் பலவகையான நுண்ணுயிரிகள் செறிந்து காணப்படும் பசுமை நிறைந்த சூழலில் தொடர்ந்து வசிக்க நேரும் மனிதர்களின் தோலில் இந்த நுண்ணுயிரிகள் அதிகரித்து காணப்படுவதாகவும், அதன் காரணமாக அத்தகையவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு என்றும் இந்த ஆய்வில் தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கு நேர் மாறாக, நகர்ப்புறங்களில் வாழ நேரும்போது ஒரு குறிப்பிட்ட ரக நுண்ணுயிரிகள் மட்டுமே மனித உடலுக்கு அறிமுகமாகும் சூழல் நிலவுவதாகவும், இவர்கள் மத்தியில் ஒவ்வாமை அதிகமாக காணப்படுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் முடிவில் இவர்கள் நகர்ப்புறவாசிகளுக்கு இரண்டு பரிந்துரைகளை செய்திருக்கிறார்கள். நகர்ப்புறவாசிகள் தங்கள் வாழ்விடங்களில் முடிந்தவரை பசுமைத் தாவரங்களை வளர்க்க வேண்டும் என்பதுடன், முடியும்போதெல்லாம் பசுமையான இயற்கை சூழலில் நேரத்தை செலவிடுங்கள் என்பது இவர்களின் முதல் பரிந்துரை.
இரண்டாவதாக, நகர்ப்புறங்களை திட்டமிடும்போது பூங்காக்கள் மற்றும் பசுமை வெளிகளுக்கு மேலதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஒருவகையில் இந்த பூங்காக்கள், நகர்ப்புறவாசிகளின் பொழுது போக்கிடங்கள் மட்டுமல்ல, மாறாக நோய்வரும் முன் தடுக்கும் நோய்தடுப்பு மருத்துவமனைகள் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment