Wednesday, April 11, 2012

மாற்று வேலை வாய்ப்புகள்


பத்தாண்டுகளுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இருந்த வேலை தடங்கள் (Career Options) மிக மிக குறைவு. இதற்கான காரணங்களில் ஒன்று மாற்று வேலைவாய்ப்புகள் இல்லாது இருந்தது. பொருளாதாரம் முதிர்ச்சி அடையாமல் இருந்ததும், வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாக இருந்ததும் மற்ற காரணங்கள்.
இந்த கட்டுரையின் நோக்கம் மாற்று வேலை வாய்ப்புகளை பள்ளி முடித்த இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.மருத்துவமும்,பொறியியலும் மாணவர்களின் முக்கிய ஆர்வமாக இருந்த போதிலும் இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட பிறகு இருபது ஆண்டுகளை கடந்த நிலையில் பல்வேறு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
வேலை தடங்களை தேர்ந்து எடுப்பது என்பது சமுதாயத்தால் பெருமையாகவும், கௌரவத்துடனும் மதிப்பிடபடுகிற ஒரு துறையில் வேலைக்கு சேர்வது என்பது நிச்சயமாக அல்ல. ஒரு இளைஞரின் ஆர்வமும்,எண்ணப்பாடும் (passion) எந்த துறையை சார்ந்து உள்ளதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து வேலை செய்வதே அவருக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும்.மேற்குலகில் இந்த விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
மாணவர்கள் எந்த துறையில் ஆர்வப்படுகிறார்கள் என்று கண்டறிய கட்டமைப்பு வலுவாக இருந்த போதிலும் அவர்கள் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்க ஊக்கப்படுத்துகிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் பல்வேறு துறை வேலைகளை முயற்சி செய்து தங்களுக்கு உகந்த துறையை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இப்படிப்பட்ட அணுகுமுறை இல்லாமல் அனைவரும் ஏதோவொரு தொழிற் படிப்பு படித்து, அதிலேயே வேலை செய்து காலம் தள்ள நிர்ப்பந்திக்கபடுகிறார்கள். இந்த நிலை முற்றிலுமாக மாறவேண்டும். சில மாற்று வேலை வாய்ப்புகளுக்கான வழிகளை கீழே காண்போம்.
தொழில் முனைவோர்
வர்த்தக தொழில் முனைவோர் என்பவர்கள் புதிய தொழிலை தொடங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் பணி செய்வோர் ஆகும். மக்களின் தேவையை கண்டறிந்து அவற்றை நிறைவு செய்ய சீரிய வழிகளையும், அதற்கு வேண்டிய பணியாளர்களையும், பொருட்களையும் ஒருங்கிணைத்து தொழிலை கட்டுவது இவர்களின் வேலை.
பொருளாதாரம் திறந்து விடப்பட்ட காரணத்தால் கணக்கற்ற வாய்ப்புகள் தொழில் முனைவோருக்கு ஏற்பட்டுள்ளது.நேர்மை, சிறந்த வாடிக்கையாளர் சேவை, கட்டுப்பாடு,கட்டுபடியாகும் விலையை கொடுக்க கூடிய படைப்பாற்றல் போன்றவை இவர்களுக்கு வேண்டிய முக்கிய தகுதிகள் ஆகும்.
சமூக தொழில் முனைவோர்(Social Entrepreneur)
சமூக தொழில் முனைவோர் என்போர் லாப நோக்கத்துடன் வர்த்தக ரீதியாக செயல்படாமல் சமுதாயத்தின் பிரச்சினைகளை களைய தொழில் திறன்களை பயன்படுத்துவோர் ஆகும். இவர்களின் குறிக்கோள் சமூக ஆதாயம் அடைவதாகும், தனி மனித ஆதாயம் அன்று.
எழுபது சதவிகித இந்திய மக்கள் கிராமங்களில் வாழும் நிலையில், விவசாயம்,மீன் பிடித்தல்,நெசவு போன்ற துறைகளில் பணிபுரிவோருக்கிடையே இந்தியாவின் சமீபத்திய வளர்ச்சியால் உண்டான வளமை பங்கீடு சரியாய் நடைபெறவில்லை.எனவே சமூக தொழில் முனைவோருக்கு தமது கணிபொறி, வர்த்தகம், சந்தை குறித்த நிபுணத்துவத்தை பயன்படுத்த ஏராள வாய்ப்புகள் இத்துறையில் உள்ளது.
விவசாயம் சார்ந்த வர்த்தகம்( Agro Based Industries)
உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
விவசாய விளைபொருள் வளர்ச்சி உலகத்தின் அடிப்படை முன்னுரிமை ஆக உள்ளதால் இத்துறையில் வாய்ப்புகள் ஏராளம். விவசாய உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, சில்லறை வணிகம் போன்ற உப துறைகள் ஏற்பட்டுள்ளன. எனவே ஏதேனும் ஒரு விடயத்தில் திறமையை வளர்த்து கொண்டால் நல்ல வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கும்.
செவிலியர்
உலகமெங்கும் செவிலியருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.நல்ல மொழித்திறனும், கருணை மனப்பான்மையும், சக மனிதர்களுக்கு உதவும் எண்ணமும் கொண்டவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம். இந்தியாவின் செவிலியர் மருத்துவர் விகிதம் வளர்ந்த நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளது.( வளர்ந்த நாடுகள் 4: ,இந்திய 1.2 : 1) எனவே இத்துறையில் கணக்கற்ற வாய்ப்புகள் உள்ளன.
மருந்தக பணியாளர்
செவிலியர் போன்றே மருந்தாக பணியாளர்களுக்கும் பல இடங்களில் பற்றாகுறை நிலவுகிறது.மருந்தகங்களில் பணியாற்ற தேவையான நிபுணர்கள் அதிகம் தேவைபடுகின்றனர். இதற்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகளை மாணவர்கள் கற்கலாம். சரியான தேர்ச்சி பெற்றால் இத்துறையிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளது.
மருத்துவ உபகரண பணியாளர்கள்(Medical Equipment Technicians)
மருத்துவமனைகள் ஏராளமான பணத்தை மருத்துவ உபகரணங்களை வாங்க செலவிடுகிறார்கள். இவற்றை பராமரிக்கவும்,பழுதானால் பழுது பார்க்கவும் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். மருத்துவமனைகளின்றி ஏராளமான மருத்துவ ஆய்வு கூடங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பணி புரியவும் ஏராளமான பணியாளர்கள் தேவை உள்ளது. இவற்றை தேர்ந்தேடுக்கும் முன்பு முன்னாள்,இந்நாள் மாணவர்களிடம் விசாரித்துவிடுவது சிறந்தது.
புள்ளியியல்/விளம்பர ஆய்வர்
கணினிகளின் இயங்குதிறன் இன்றைய நாளில் வெகு அதிகமாக ஆகி விட்டது, ஏராளமான தகவல்கள் ஒவ்வொரு துறை குறித்தும், கணினிகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது புள்ளியியல் நிபுணர்களின் தேவையை அதிகரித்து உள்ளது, இவர்களின் வேலை குவிந்து கிடக்கும் தகவல்களை ஆராய்ந்து புள்ளியியல் மென்பொருட்களை, முறைகளை பயன்படுத்தி முக்கியமான விவரங்களை கண்டறிவது ஆகும். சந்தை ஆய்வு நிபுணர்களுக்கும் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. கணிதம் மற்றும் புள்ளியல் ஆர்வம் உள்ளவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம்.
சுற்றுலா
நடுத்தர மக்களிடையே செல்வம் சேர்ந்துவிட்ட நிலையில், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. வெளிநாட்டு பயணிகளும் இந்தியாவுக்கு வருவது அதிகரித்து உள்ளதால் பிரகாசமான வாய்ப்புகள் இத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.சேவை எண்ணமும், பொது மக்களிடையே எளிதில் பழகும் திறமையும், உள்ளவர்கள் இத்துறைக்கு செல்லலாம்.விடுதி மேலாண்மை கல்வி நிறுவனங்களும் செயல்பட துவங்கி உள்ளன.
போக்குவரத்து
விமான பயணங்கள் அதிகரித்துள்ளதாலும், திறமையான விமான ஓட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் செல்வம் தரும் துறையாக இது உள்ளது. விமானியாக பல வருட கல்வி, பயிற்சி, பல மணி நேர விமான ஓட்டும் பயிற்சி போன்றவை தேவைபட்டாலும் இத்துறையில் பேராவல் கொண்டவர் யாராயினும் பிரகாசிக்கலாம்.
சில்லறை வணிகம்
ஒழுங்கு படுத்தபடாத துறையாக இது இருப்பினும் உலகமயமாக்கலுக்கு பிறகு நிலை மாறி பல பெரு நிறுவனங்கள் சங்கிலித் தொடர் சில்லறை வணிக கடைகளை திறந்துள்ளன. மொத்த விற்பனை செய்வோர், கிடங்கு கையாள்வோர், சில்லறை வணிகர், கடை மேலாளர் என்று பல புதிய வாய்ப்புகள் இத்துறையில் வளர்ந்து உள்ளது.
வங்கி, நிதி மற்றும் காப்பீடு
வளம் மற்றும் வேலைவாய்ப்புகள் கொழிக்கும் துறையென இதனை விவரிக்கலாம்.கணக்காளர்(Auditor) தொழில் செய்வோர் ஒரு நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நிர்வாகம் மற்றும் ஆய்வு செய்கின்றனர், பணம் பெருகி போன இந்நாளில் புதிதாக ஏற்பட்டு இருக்கும் வேலை. இது செல்வத்தை முதலீடு செய்யும் வாகனங்களான பங்குகள், பத்திரங்கள், முன்பேரம் போன்றவற்றை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் வேலை ஆகும். மேலும் செய்யப்பட்ட முதலீடுகளை மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு வேலை செய்தல் இவ்வேலையின் மற்ற பொறுப்புகள் ஆகும். காப்பீடு இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் மற்றொரு துறையாகும்.
தொலைக்காட்சி, விளம்பரம், திரைப்படம்
இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த ஒற்றை தொலைக்காட்சி என்ற நிலை மாறி இன்று நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள் வந்துவிட்டன, இதனுடன் இணையமும் சேர்ந்துவிட்ட நிலையில் இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. படைப்பாற்றல் நிறைந்தவர்களுக்கும், தொழில் நுட்ப பணியாளர்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது.இந்திய ரசிகர்களின் ரசனையும் உயர்ந்து விட்டது, அதனால் இத்துறை வல்லுனர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். நுகர்வு கலாச்சாரம் தன பங்குக்கு விளம்பரத்துறை வேலைவாய்ப்பை வெகுவாக அதிகரித்து இருக்கிறது.
விற்பனை
விற்பனை செய்வதில் வல்லமை என்பது வாழ்வில் மிக சிறந்த ஒரு திறமை ஆகும், விற்பனை செய்வோர் வேலை செய்யாவிட்டால் மற்றவர்க்கு வேலை கிடைப்பது அரிது. விற்பனை தொழிலை பயிற்றுவிப்பதற்கு நிறைய கல்வி நிறுவனங்கள் தோன்றி உள்ளன. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மக்கள் தொடர்பு திறமை கொண்டோர் இத்தொழிலை நாடுவது சால சிறந்ததாக இருக்கும். விற்பனை செய்யும் அளவை பொறுத்து இத்துறையில் ஊக்கத்தொகையும் (incentives) வழங்கப்படுகிறது.
மேலே விவரிக்கபட்டவை மட்டுமல்லாமல் மொழி வல்லுனர்கள், இதழாளர்கள், வாகன போக்குவரத்துநிபுணர்கள், கப்பல் பணியாளர், பல்துறை ஆசிரியர் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் பெருகி உள்ளது. வேலையின் மீது நல்லெண்ணப்பாடு, கடின உழைப்பு மற்றும் தம் திறமையில்இருந்துவேண்டியதை பெறும் கூர்மதி உள்ளோருக்கு வாய்ப்புகள் குவிந்து உள்ளன. உங்கள் மனதில் பேராவல்,பொங்கும் துறையை தேர்ந்தெடுத்து செல்லுங்கள், நிச்சயம் பெருவெற்றி அடைவீர்கள்.

No comments:

Post a Comment