Wednesday, March 21, 2012

மத்திய அரசின் Budget 2012 - ஓர் அலசல்

நமது ஊர்களில் மோடிமஸ்தான்களைப் பார்த்திருப்போம். ஒரு பெட்டியில் பாம்பு வைத்திருப்பார்கள். ஒரு கீரிப்பிள்ளை கட்டிக்கிடக்கும். சுற்றி கூட்டம் நிற்கும். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப்போகிறேன் என்று சொல்லியே கூட்டத்தை கூட்டி வைத்திருப்பார்கள். கடைசிவரை விடமாட்டார்கள். கூட்டமும் எதிர்பார்த்துவிட்டு கலைந்து போய்விடும். இந்த நினைவுதான் வருகிறது மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது.


நாட்டின் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய ஏழைகளும், நடுத்தரவர்க்கத்தினரும் ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் வரும்போது சில எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். தங்களுடைய பொருளாதாரச் சுமைகளை இந்த நிதிநிலை அறிக்கைகள் ஓரளவுக்கு குறைக்கக்கூடும் என்பது இந்த எதிபார்ப்பின் முக்கிய அம்சம். ஆனால் இப்போது சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை ஒரு பயனையும் தராமல் ஒரு சடங்காக முடிந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாக குறிப்பிடலாம்.

முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்தது வருமானவரியின் உச்சவரம்பு. இந்த உச்சவரம்பு எற்கனவே INR1,80,000/= ஆக இருக்கிறது. இதை இப்போது INR 2,00,000/= ஆக உயர்த்தி இருக்கிறார். இந்த உயர்வில் எந்தப் பயனும் இல்லை. கடந்த வருட நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டபோது இருந்த விலைவாசிக்கும், இப்போதுள்ள விலைவாசிக்கும் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த இருபதாயிரம் உயர்வு என்பது ஒரு ஏட்டுச்சுரைக்காய்- கறிக்கு உதவாது என்கிற நிலைதான். குறைந்தது ஒரு INR 3,00,000/= ஆக உயர்த்தி இருந்தால் மத்திய நிதி அமைச்சர் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகளை உணர்ந்து இருக்கிறார் என்று ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.

நாட்டின் முக்கிய பிரச்னை கறுப்புப்பணம். குறிப்பாக வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம். இதை நாட்டுக்கு திரும்பக்கொண்டு வருவதற்கு எவ்வித ஆக்கபூர்வமான யோசனையும் இந்த அறிக்கையில் இல்லை. மாறாக, உள்நாட்டில் கறுப்புப்பணத்தை ஒழிக்க புறப்பட்டு இருக்கிறேன் என்று காட்டும் விதமாக மீண்டும் நடுத்தட்டு மக்களின் தலையில் கை வைத்திருக்கிறது இந்த அறிக்கை. தங்க நகை வாங்குவோர் இனி பலவகையிலும் 4% வரியும் கட்டவேண்டும். அத்துடன் இரண்டு லட்சம் மதிப்புக்கு மேல் வாங்கினால் PAN (PERMANANET ACCOUNT NUMBER) பான் கார்டு காட்டி வாங்கவேண்டும். அத்துடன் அதற்கான வரி DAS ( DEDUCTION AT SOURCE) என்ற முறையில் பிடித்தம் செய்யப்படும். ஏற்கனவே தங்க நகைகளின் விலை ஏறிக்கிடக்கிறது. இனி பவுனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுக்கவேண்டுமென்றால் இந்த சுமை நடுத்தரவர்க்கத்துக்கு பெரும் இடராக இருக்கும்.அதுமட்டுமல்லாமல் இந்த நடைமுறைகளிலும் வரிகளிலிருந்தும் தப்பிக்க விலைகளை குறைத்துப்போட்டோ அல்லது பல உறவினர் பெயர்களிலோ சில்லரையாக நகைவாங்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படலாம். இதனால் மேலும் கணக்கில் வராத கறுப்புப்பணத்தின் புழக்கம் அதிகரிக்கும்.

இதே முறைதான் அசையாச்சொத்துக்களை வாங்குவோருக்கும் கடைப்பிடிக்கப்படும். இதனால் பினாமி பெயரால் சொத்துக்கள் வாங்குவது அதிகரிக்கும். இவற்றைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட தவறுகளை செய்வதற்கு அரசே வழிவகுத்துக் கொடுப்பதாக தெரிகிறது.

நடுத்தரவர்க்கத்துக்கு உதவுகிறேன் என்ற முறையில் சில நுகர்வோர் பொருள்களுக்கான உற்பத்திவரி குறைக்கப்பட்டு இருக்கிறது. அவை LCD, LED தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும், LED மின் விளக்குகளுக்கும் உற்பத்திவரி குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மிக மிக முக்கியமாக அத்தியாவசியப்பண்டங்களில் ஒன்றான மகளிரின் சானிடரி நாப்கின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபோன், மெமரி கார்டு ஆகியவற்றின் விலைகளும் குறையும்.மெமரி கார்டுகளின் விலைகுறைப்புக்கு காரணம் இன்னும் அதிகமான ஆபாசப்படங்களை பதிவுசெய்து வைத்துக்கொண்டு மக்கள் மகிழ்வாக இருக்கட்டும் என்ற பரந்த நோக்கமாக இருக்கலாம். பீடி, சிகரெட்கள் விலை வழக்கம்போல் கூடும். சொகுசுகார்களுக்கு விலை கூடும். இப்படி பரவலாக ஒரு பொருளாதார மாற்றத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியாத மாற்றங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில்- எங்கே போய் சொல்ல? யாரைக்கட்டிப்பிடித்து அழ?

நகர்ப்புறங்களின் வளர்ச்சிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி இருககிறார்கள். இது வெளிப்படையில் வரவேற்கத் தகுந்ததாக தோன்றும். ஆனால் இதன் உண்மைப் பலனை அனுபவிக்கப் போகிறவர்கள் அரசியல்வாதிகள், ஒப்பந்தப் புள்ளிகாரர்களாகவே இருப்பார்கள். கடைசியில் கிணறு காணாமல்போன கதைதான். ஒருவகையில் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற நோக்கமாகவும் இருக்கலாம்.

விவசாயிகளின் கடனுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி தொகை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் விவசாய இடுபொருள்களின் விலைகளைக் குறைக்காமல் கடன்தொகையை உயர்த்தி இருப்பது கடனை அதிகம் வாங்கி அதிகவிலை கொடுத்து இடுபொருள்களை வாங்குங்கள் என்று விவசாயிகளைத் தூண்டுவது போலாகும். முக்கியமாக உரத்தின் விலை குறைக்கப்படவில்லை. மத்திய நீர்வள அமைச்சகத்தின் அறிக்கையின்படி வரும் ஆண்டின் பாசனத்துக்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு பணம் கட்டவேண்டிய நிலை வரலாம். அந்த தண்ணீருக்கு மானியம் கொடுக்கும் முறையிலாவது ஒரு சலுகை இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை. விவசாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஒருநாளும் நாட்டை முன்னேறவிடாது.

நான் திரும்பத்திரும்ப கூறுவதன்படி இந்த அரசுக்கு முதலாளிகளின் மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலும் ஒரு தனி அக்கறை. நாட்டை சூறையாட அவர்களுக்கு அனுமதி அளிப்பதில் தயக்கமே காட்டுவது இல்லை. அதன்படி இந்த நிதி நிலை அறிக்கையிலும், பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்யம் விலை மதிப்புமிக்க இயந்திரங்களுக்கும், உதிரி பாகங்களுக்கும் பெருமளவில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது இதுதான். தின்றவன் திங்க திருப்பாலக்குடிகாரர்கள் தெண்டம் கொடுத்த கதை. ஐந்து பவுன் தங்கம் கொண்டு வருபவனுக்கு இறக்குமதிவரி. பெரும் இலாபம் சம்பாதிக்கிறவனுக்கு இறக்குமதி சலுகை.- விளங்குமா?


இவ்வளவுக்கும் பிறகு அரசின் வருமான உயர்வுக்கு – அரசின் செலவுக்கு என்ன வழிவகை செய்து இருக்கிறது என்று நாம் கேட்டால் நமக்கு ஒரு அதிர்ச்சி இதில் காத்திருக்கிறது. தனது வருமானத்துக்கும் செலவுக்கும் அரசு பங்கு விலக்கல் மூலம் Rs. 30,000 கோடி திரட்டுவேன் என்கிறது. இந்த பங்கு விலக்கல் என்றால் என்ன? அது ஒன்றுமல்ல. என் பாட்டனும் முப்பாட்டனும் எனக்காக வேண்டுமென்று தேடிவைத்துள்ள நடுவிக்காடு, சேண்டாகோட்டை, அலத்திக்காடு தோப்பையும், திருத்துறைப்பூண்டி வயலையும் எனது தவறான பொருளாதார அணுகுமுறைகளால் நான் விற்றுவிட்டு “ஷோக்” கொண்டாடுவதுதான் பங்கு விலக்கல். அதாவது இந்திய அரசு, இவ்வளவு நாளாக பல இலாபம் தரும் நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்து வைத்துள்ளது. இப்போது இதில் இருந்து பங்குகளை விற்றுவிட்டு அந்தப்பணத்தை அரசின் வருமானமாக வைத்துக் கொள்வேன் என்கிறது.

மொத்தத்தில் பார்க்கும்போது இந்த முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு சடங்கு ஆக நிறைவேறி இருக்கிறதே தவிர இதில் பெரும்பான்மை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் ஒன்றும் இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. பெரும் தொழில் அதிபர்கள் இந்த அறிக்கையை வரவேற்று இருககிறார்கள். மக்கள் நல இயக்கங்கள், விவசாய அணியினர், பாட்டாளி வர்க்கத்தினர் இந்த நிதி நிலை அறிக்கையை வரவேற்க முடியாது.

பொருளாதார அறிஞர்கள் BUDGET என்கிற ஆங்கில வார்த்தைக்கு 'BUD' 'GET' என்று பிரித்து விளக்கம் தருவார்கள். அதாவது ஒரு மொட்டு மலர்கிறது என்று பொருள். அந்த மலரின் மொட்டு மலரும்போது அதில் மணம் பரப்பும் சுகந்தம் வேண்டும். அதில் உற்பத்திக்கு மகரந்தம் வேண்டும். அந்த மலர் தேனருந்த வண்டுகளை அழைக்க வேண்டும். அதன்மூலம் காய்க்கவேண்டும்; கனியவேண்டும்; பலன்தரவேண்டும். இந்த தன்மைகள் இல்லாத மலர்கள் மலர்ந்தும் மலராத பாதி மலர்களே. நமது நிதியமைச்சர் மலர வைத்துள்ள இந்த மலர் ஒரு காட்டுப்பூ. கவைக்குதவாது.

No comments:

Post a Comment