உன்னைவிட அதிகப் பாதிப்பு உள்ளவர்களே இப்படிச் சாதனைகள் செய்கிற போது உன்னால் முடியாதா?'
உயரம் நான்கடிக்கும் குறைவாக. வளைந்த கால்கள். நடக்கவே சிரமம். ஆனால் அவருடைய குரலில் உறுதியும், தெளிவும் தெரிகிறது. மாணவர்களுக்கான சுயமுன்னேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
திருச்சி உறையூரில் உள்ள ஆர்.என்.எச். கண் மருத்துவமனை. இலவச கண்பரிசோதனை முகாம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த முகாம் நடக்க முன் முயற்சி எடுத்தவரும்அவரே
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருச்சி ஜி.வி.என். மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. அதை ஏற்பாடு செய்ததும் அவரே
அவர்... பெ.கலையரசி.
மாற்றுத் திறனாளிப் பெண்களுக்குச் சேவை செய்யும் எண்ணத்துடன்"பூர்ணோதயா ட்ரஸ்ட்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கலையரசி
தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு கலையரசிக்கு மாற்றுத் திறனாளிப் பெண்களுக்குச் சிறந்த முறையில் சேவை செய்ததற்காக விருது கொடுத்தது.
கலையரசியுடன் பேசினோம்:
""நான் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள குளக்குடி என்ற ஊரில் பிறந்தேன். பிறந்ததிலிருந்தே உடல் வளர்ச்சியில் குறைபாடு இருந்தது. கால்கள் வளைந்து இருந்தன. என்னால் பிறரைப் போல வேகமாக நடக்க முடியவில்லை. பள்ளியில் படிக்கும்போது என்னுடன் படித்தவர்கள் என் உடற் குறைபாட்டுக்காகக் கிண்டல், கேலி செய்தார்கள். நான் அவற்றை ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. என் உடற்குறைபாட்டையும்மீறி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேகம், வெறிதான் எனக்கு ஏற்பட்டது
பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் தையற் கலையில் பயிற்சி பெற்றேன். அதன் பிறகு, தொலை தூரக் கல்வி மூலம் எம்.ஏ., சமூகவியல் படித்தேன்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காகத்திருச்சியில் நடத்தப்படும்"விடிவெள்ளி' என்ற சிறப்புப் பள்ளியில் 11 ஆண்டுகள் பணி செய்தேன். இருந்தாலும் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
எனவே 2002 ஆம் ஆண்டில் "பூர்ணோதயா ' பதிவு செய்தேன். அதன் மூலம் மருத்துவமுகாம்களை நடத்தி வந்தேன். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள், இலவசக் கண் பரிசோதனை முகாம்கள் என பலருடைய உதவியுடன் நடத்தி வந்தேன். 2007 ஆம் ஆண்டிலிருந்து பூர்ணோதயா அறக்கட்டளைப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.
மாற்றுத் திறனாளியான பெண்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது. மாற்றுத் திறனாளிப் பெண்களை அவர்களின் பெற்றோர் அறக்கட்டளையைப் வீட்டிலுள்ள நாற்காலி, மேசை போலத்தான் நினைக்கிறார்கள். அவர்களை வீட்டை விட்டு எங்கேயும் அனுப்பமாட்டார்கள். பெற்றோர் இருக்கும் வரை மாற்றுத் திறனாளிப் பெண்களை பார்த்துக் கொள்வார்கள். பெற்றோர் மறைந்த பிறகு, மாற்றுத் திறனாளிப் பெண்களை பார்த்துக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். கூடப் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் இருந்தாலும் காலம் முழுக்க மாற்றுத் திறனாளிப் பெண்களை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட பெண்களின் நிலை? அவர்களின் எதிர்காலம்? கவனிக்க யாருமற்ற அனாதைகளாகி விடுவார்கள். எனவே மாற்றுத் திறனாளிப் பெண்கள் தங்கள் சொந்தஉழைப்பின் மூலம் வாழ வேண்டும். அதற்கு அவர்களுக்கென்று தொழில்கள் வேண்டும். அதற்காக அவர்களுக்குத் தொழிற் பயிற்சிகள் தர வேண்டும் என்று நினைத்தேன். அந்த நினைப்பின் விளைவாகஉருவானதுதான் பூர்ணோதயா அறக்கட்டளை.
என்னுடைய சொந்த ஊரான குளக்குடியில் எனது அண்ணன் எனக்கு இலவசமாகத் தந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் பூர்ணோதயா அறக்கட்டளைக்கான கட்டடம் கட்டும் பணி ஆரம்பமானது. சொத்தில் எனக்குக் கிடைத்த பங்கையும் அதில் போட்டேன். எனது தன்னலமற்ற எண்ணத்தைப் புரிந்து கொண்ட எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தினர், கட்டிடம் கட்ட பெரிய அளவு பண உதவி செய்தார்கள்.
இப்போது பூர்ணோதயா அறக்கட்டளைக் கட்டிடத்தில் 15 மாற்றுத் திறனாளிப் பெண்கள் தங்கி தொழிற்பயிற்சிகளைப் பெற முடியும். தங்குமிடம், உணவு, பயிற்சி எல்லாம் இலவசம்.
மாற்றுத் திறனாளிப் பெண்களுக்குக் கம்ப்யூட்டர் பயிற்சி, தையற் பயிற்சி, செயற்கை ஆபரணம்செய்யப் பயிற்சி, காகிதப் பை, கம்ப்யூட்டர் சாம்பிராணி, பினாயில், சானிட்டரி நாப்கின் போன்றவற்றைச் செய்ய பயிற்சி தருகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் குறைந்தது ரூ.500 இருந்தால் சொந்தமாகத் தொழில் தொடங்கிச் செய்ய முடியும்.
கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு எங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுக்கிறோம். தையற் கலை பயிற்சி பெற்ற பெண்களுக்கு மாவட்ட மறுவாழ்வு மையத்தின் மூலமாக இலவச தையல் இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். எனவே எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் சுடிதார், பிளவுஸ் போன்றவற்றைத் தைத்துக் கொடுத்து அன்றாடம் அவர்களுடைய தேவைக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் சாம்பிராணி, பினாயில், செயற்கை ஆபரணங்கள் ஆகியவற்றை விற்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். பல கல்லூரிகளில் எங்களை ஸ்டால்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். எனவே எங்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் சொந்தக் கால்களில் நிற்க முடியும்.
நானும் ஒரு மாற்றுத் திறனாளியாக இருப்பதால்தான் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிப் பெண்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் வசதியான குடும்பப் பின்னணி உள்ளவள். ஆனால் நிறைய மாற்றுத் திறனாளிப் பெண்களின் குடும்பங்கள் ஏழ்மையில் வாடுகின்றன. அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறந்த பெண்கள் வாழ்வில் எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கும்? அவர்களைத் துன்பத்திலிருந்துமீட்க நான் செய்யும் சிறு முயற்சியே இந்த பூர்ணோதயா அறக்கட்டளை.
எங்களுடைய தன்னலமற்ற சேவையைப் பார்த்து எனக்கு நிறைய உதவிகள் கிடைக்கின்றன. நன்கொடைகள் கிடைக்கின்றன. நான் என் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ உதவி கேட்கும்போது, எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கமாட்டேன். என்னைப் போன்ற பெண்களுக்கு உதவி செய்யுங்கள் என்றே கேட்பேன். அதனால் பலர் தாராளமாக உதவுகிறார்கள்.
நான் திருச்சியில் மெஜஸ்டிக் லயன்ஸ் கிளப் தலைவியாக இருப்பதால், லயன்ஸ் கிளப் மூலமாகவும் பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.
இன்னொன்றையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். எனக்கு அமைந்தது போன்ற குடும்பம் எல்லாருக்கும் அமையாது. என் தந்தை பெரியசாமிக்கு இப்போது வயது 85. ஆனால்என் பணிகளுக்கு அவர் துணை நிற்கிறார். அவரால் முடிந்த உதவிகளை இப்போதும் செய்கிறார். என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள் எல்லாரும் எனக்கு உதவுகிறார்கள்.
எனது பெரியப்பா மகன் டாக்டர் ராஜசேகர், நான் சிறுமியாக இருந்த நாளிலிருந்தே எனக்கு ஊக்கமூட்டி வந்தார். "உன்னால் எல்லாம் முடியும். உன்னால் முடியாத செயல் எதுவுமில்லை' என்று ஊக்கப்படுத்துவார். என்னைவிட அதிக உடற் குறைபாடு உள்ளவர்களின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, "உன்னைவிடஅதிகப் பாதிப்பு உள்ளவர்களே இப்படிச் சாதனைகள் செய்கிற போது உன்னால் முடியாதா?' என்றுகேட்பார். நிறையப் புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார். இப்படிப்பட்ட குடும்பச் சூழல் காரணமாகவே என்னால் மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு உதவ முடிகிறது. இன்னும் நிறையப் பேருக்கு உதவ வேண்டும் என்பதே என் விருப்பம் '' என்கிறார் கண்களில் கனவுடன்.
No comments:
Post a Comment