மனித இனம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. உலக வரலாறு பதிவாக்கப்பட்ட காலம் முதல் இந்த உலகில் வாழ்ந்த மனிதர்களில் ஒருசிலரை மட்டும் தான் வரலாறு மிக நேர்த்தியாக உயர்வாக பதிவு செய்துள்ளது.
சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி வசதி வாய்ப்புகள், ஆட்சி அதிகாரங்களை பெற்றவர்களாக இருந்தாலும் சரி வாழும் காலத்தில் பயனுள்ள வகையில் வாழ்ந்து மனித இனம் ஆண்டாண்டு காலத்திற்கும் பலன் பெறுகின்ற அளவில் அறச் செயல்கள் புரிந்தவர்களை உலகம் உள்ளவரை மனித இனம் நினைவு கூறும். அவர்களைப் போற்றிப் புகழுகிறது.
அதேபோல எல்லாவிதமான வாய்ப்புகளைப் பெற்றும் அனைத்தையும் வீணாக்கி மனித இனத்திற்கும் பூமிக்கும் தீங்கிழைத்தவர்களையும் வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது. அப்படிப்பட்டவர்களை மனித இனம் தூற்றுகிறது. இதுபோல பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வையும் வரலாற்று ஏடுகளில் காணலாம்.
அதேபோல எல்லாவிதமான வாய்ப்புகளைப் பெற்றும் அனைத்தையும் வீணாக்கி மனித இனத்திற்கும் பூமிக்கும் தீங்கிழைத்தவர்களையும் வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது. அப்படிப்பட்டவர்களை மனித இனம் தூற்றுகிறது. இதுபோல பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வையும் வரலாற்று ஏடுகளில் காணலாம்.
அப்படி வரலாற்றில் பதிவாக்கப்பட்ட பெருமைக்குரியவர்கள் என்று போற்றப்படும் ஒருவர்ன் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து பார்ப்பது நமது வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.
ஒருவர் பென்னி குயிக் என்ற ஆங்கிலேயப் பொறியாளர். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மற்றொருவர் - வரலாற்றுப் புகழ்பெற்ற முகலாய சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னராகத் திகழ்ந்த ஷாஜஹான். 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
ஆங்கிலேய கர்னல் ஜான் பென்னி குயிக் என்ற பிரிட்டிஷ் பொறியாளர் இலண்டனில் பொறியியல் படித்துவிட்டு பிரிட்டிஷ் இராணுவத்தில் கர்னலாக பணி நியமனம் பெற்றவர். தற்போது தமிழக – கேரள மாநிலங்களிடையே பற்றி எரியும் “முல்லைப் பெரியாறு” அணையை கட்டியவர்.
இனத்தால் ஆங்கிலேயர் என்றாலும் பிறப்பால் இந்தியர். கர்னல் பென்னி குயிக் 1841 – ல் புனே நகரில் பிறந்து இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சென்னை மாகாண சட்டசபை கவுன்சிலில் உறுப்பினராகவும் இருந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் உருவான நீர்ப்பாசனத் திட்டங்களில் இவரின் பங்கு பெரியது.
ஆனால் இவரே திட்டம் தீட்டி, முன்னின்று கட்டியதுதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு சொந்தக்காரர் என்று கூடச் சொல்லலாம்.
இந்த அணை உருவாவதற்கு முன்பு, தென் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களான மதுரை இராமநாதபுரத்தில் தலைவிரித்தாடிய பஞ்சம், பசியால் துடித்து இறந்த மனித உயிர்கள், கால்நடைகள் ஏராளம் என்பதை பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்கால அரசிதழ்களில் பதிவு செய்துள்ளனர். அன்றைக்கு தென்மாவட்டங்களுக்கு பெரிய நதி என்றால் வைகை தான். ஆனால் வைகை பல முறை பொய்த்துப் போய் மக்களை பெரும் துயரத்தில் தள்ளிவிட்டது.
அப்போதுதான் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகப் பகுதிக்குள் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற பெயரில் 56 கிமீ தூரம் தமிழகத்தில் ஆறாகப் பாய்ந்து. கேரளாவுக்குள் நுழைந்து முல்லையாற்றுடன் கலந்து அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைக் கவனித்த பென்னி குயிக் ஒரு திட்டம் தீட்டினார்.
இந்த ஆற்றை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் என்பதை ஆய்வு மூலம் தெரிந்து கொண்டார். பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பெரியாறு நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு பெரியாறு முல்லையாறுகள் கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு அங்கிருந்து ஒரு மலையை குடைந்து குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடுவது என்று திட்டம் தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார்.
அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. பென்னிகுயிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணையில் கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர்.
காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள். வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல். மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து மழையினால் உருவான வெள்ளத்தினால் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனை அடுத்து இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசு விரும்பவில்லை. ஆங்கிலேயே அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலகட்டங்களில் கிடைக்காததால் மனம் உடைந்து போன பென்னிக்குயிக் இங்கிலாந்து சென்றார் அங்கேயிருந்த தனது சொத்துக்களை யெல்லாம் விற்றார். வீட்டில் இருந்த கட்டிலைக் கூட அவர் விடவில்லை. அதையும் விற்றார். தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு பெரும்பணக்காரர்களிடம் கையேந்தி நிதி சேகரித்தார். தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பூமியில் தனக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களாக இருந்தாலும் மக்கள் வறட்சியில் வாடக் கூடாது அவர்கள் தண்ணீரின்றி தவிக்கக் கூடாது, காய்ந்து கருகிப் போன தென் தமிழக வயல்களெல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு பென்னிக் குயிக். முல்லைப் பெரியாறு அணையை 1895 ம் ஆண்டில் கட்டி முடித்தார்.
ஆங்கிலேயரும் தமிழரும் சிந்திய ரத்தம்.
18.6.1890 அன்று பெய்த பெருமழையில் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகளில் இருந்த மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டார் பென்னி. பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும் 1893ல் காலரா நோய் வந்தும் பலர் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல 45 ஆங்கிலேயர்களும் கூட இறந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட என்ஜினீரியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கான கல்லறை இன்றும் அங்குள்ளது!
நான்கு வருடமாக தனது தந்தையைப் பார்க்க முடியாமல் தவித்த ஒரு வெள்ளைக்கார சிறுமி தனது தாயாருடன் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்த போது ஒரு பெரிய கல் அந்தச் சிறுமியின் தலை மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். அந்த சிறுமியின் கல்லறையும் கூட அணைப் பகுதியில்தான் இன்றும் உள்ளது.
தென்தமிழக மக்களின் வாடிய வயிறுகளையும், சுருண்டு விழுந்து அவர்கள் செத்த பரிதாபத்தையும் கருகிப் போன வயல்களையும் பார்த்து வேதனைப்பட்டு, இந்த அணையை தனது உழைப்பையும். சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுயிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக!? பார்க்கப்படுகிறார். பொதுவாகவே ஆபத்தான காலத்தில் தங்களுக்கு யாரெல்லாம் உதவுகிறார்களோ, தங்களது சங்கடங்களை யார் தீர்க்கின்றார்களோ அவர்களையெல்லாம் தெய்வமாக்கி வணங்கக் கூடிய வழக்கமுடையவர்கள் தான் தமிழர்கள்.
பென்னியின் படத்தை வைத்து தென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் இன்றும் வணங்கி வருகின்றனர்.
அணைகட்டி முடிக்கப்பட்டவுடன் தனது மனைவியோடு அங்குச் சென்று பொங்கிப் பெருகி அணை வழியாக ஓடி வந்த தண்ணீரைப் பார்த்து பென்னிகுயிக் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரே ஒரு அரசு அதிகாரி, அதிகப்பட்ச நேர்மை மக்கள் மீது கரிசனம் கொண்டு செயல்பட்டால் கூட எவ்வளவு பெரிய நன்மை விளையும் என்பதற்கு பென்னி குயிக் பெரியதொரு நிர்வாகவியலின் உதாரணம்!
இந்த அணை அக்டோபர் 1895 ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.
பென்னிகுயிக் கோயில்கள்.
தேனி உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் கூட தங்களது வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னிகுயிக் என்று பெயர் சூட்டுவது பாரம்பரியமாக தொடர்கிறது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது பென்னிகுயிக்குக்கு படையலிடுவதை வழக்கமாக
கொண்டுள்ளனர்.
பென்னிகுயிக் கோவில்களும் கூட தேனி மாவட்ட கிராமங்களில் ஏராளமாக உள்ளன.
பென்னி குயிக் மனிமண்டபம்
பென்னிகுயிக்கை கொளரவிக்கும் வகையில் அவரது சிலையை தமிழக அரசு மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில நிறுவியது. 2011 ம் ஆண்டு பென்னிகுயிக் குறித்த புத்தகத்தை மதுரை மாவட்டஆட்சித் தலைவர் சகாயம்வெளியிட்டார்.
நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு செயற்கரிய நன்மை செய்த பென்னிகுயிக்குக்கு மணிமண்டபம் கட்ட அரசு முடிவெடுத்தது மிகவும் தாமதமானது ஒன்றுதான் என்றாலும் பாராட்ட வேண்டிய விஷயம். இந்த மண்டபத் திறப்புக்கு லண்டனில் வசிக்கும் பென்னி குயிக்கின் பேரனை வரவழைக்கிறது தமிழக அரசு.
இப்படி தனது வாழ்நாள் எல்லாம் மக்களின் பசி பஞ்சத்தை போக்கிட உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்த பென்னி குயிக்
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காயிடம் பெற்றுள்ளார். தமிழன் என்ற இனம் உள்ள வரை பென்னி குயிக்குக்கு நினைவும் கூறும் அவருக்கு நன்றியும் செலுத்தும்.
ஏனெனில் தன் நாட்குறிப்பில் ‘இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே நான் இங்கே நற்செயல் புரிந்திட வேண்டும். இதை தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் நான் மீண்டும் இப்புவிக்கு வரப்போவதில்லை’ என்னு எழுதியுள்ளார் பென்னிகுயிக்.
இஸ்லாமிய அடிப்படையில் பென்னி குயிக் மட்டும் கலீமாவை முன்மொழிந்து ஓர்இறைக் கொள்கையை வாழ்வில் கடைப்பிடித்திருந்தார் என்றால் இந்த உலகம் அழிக்கப்படுகின்ற காலம் வரை அவருக்கு நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும். மறுமையில் சொர்க்கம் எளிதாக்கப்பட்டுவிடும். இந்த பூமியில் பென்னி குயிக் படைக்கப்பட்டதற்கான தேர்வில் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார். தீர்ப்பு இறைவனிடத்தில் உள்ளது
No comments:
Post a Comment