Tuesday, February 21, 2012



இன்றைய ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் காண்பவர் அல்லது கேட்பவர் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.




நாம் சுவாசிக்கும் உயிர் காற்று நம்மை சூழ்ந்துள்ளது போன்று விளம்பரங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் எங்கு திரும்பினாலும் விளம்பரங்கள் அவர்கள் முகம் பார்த்தே இருக்கின்றன. வீட்டிலும், பள்ளி செல்லும் வழியிலும் விளம்பரங்கள் அவர்கள் கண்களை விட்டு மறைவதில்லை.
இன்றைய நாளில் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்கள் நேரிடையாகவே நமது தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தடுக்கிறது.

எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் சாதாரண நிகழ்ச்சிகளையும், விளம்பரங்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை என ஆய்வு கூறுகிறது. இதனால், விளம்பரங்கள் சொல்வது உண்மையயன்றும், அதுவே சிறந்தது என்றும் நம்பி அதையே வாங்க விரும்புகின்றனர். ஒருவேளை தான் விரும்பியதை தன் பெற்றோர் வாங்கித் தர மறுக்கும் போது அதை எப்படியாவது அடைந்திட திருடவும் துணிகின்றனர்.

இன்று பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் குழந்தைகளைத் தங்களது உற்பத்திப் பொருட்களின் விளம்பர தூதுவர்களாகவும், வியாபாரத் தளமாகவும் பார்க்கின்றனர். எனவே, தான் ஊடகங்கள் வழியாக தங்கள் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் விருப்பங்களைக் கட்டுப்படுத்தும் காரணிகளாக விளம்பரங்களைத் திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தாங்கள் தொலைக்காட்சியில் பார்த்த, மனதை ஈர்த்த புதிய பொருட்களை வாங்க தங்கள் பெற்றோரை வற்புறுத்துகின்றனர். இதைவிட பெரிய கொடுமை, இன்று குழந்தைகள் எந்தெந்த உணவு வகைகள் சாப்பிட வேண்டும் என விளம்பரங்களே அறிவுறுத்துகின்றன.

பகுத்து ஆராயும் வயதில்லாத குழந்தைகள் தாங்கள் பார்க்கும் உணவு விளம்பரங்களில் மயங்கி அதை உடனடியாக உண்ண ஆசைப்படுகின்றனர். பெற்றோர்களும் விளம்பரங்கள் பரிந்துரைக்கும் பொருள்களையே பல வேளைகளில் வாங்கியும் தருகின்றனர்.

இன்று தொலைக்காட்சிப் பெட்டி ஓலைக் குடிசைக்கும் சாத்தியமாகிவிட்ட சூழ்நிலையில் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்கும் விளம்பரங்கள் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் தன்னால் அப்பொருளை வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் உருவாக்கி விடுகின்றது.

தன் வருமானத்தைக் கொண்டு, சுயமாகச் சிந்தித்து திட்டமிடாமல் விளம்பரங்களின் மாயையில் சிக்கி, வரம்புக்கு மீறிய செலவு செய்ததால் நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள் இன்று ஏராளம்.

நூறு சதவீதம் சரியானதைச் சொல்லி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இங்கு எதுவுமில்லை. மாறாக, மக்களைச் சுண்டியிழுத்து விற்பனையைப் பெருக்க நெறிபிறழ்ந்து தயாரிக்கப்படுகின்றனர்.

வியாபாரமும், நுகர்வும் மனித வாழ்க்கையில் பிரிக்க முடியாத செயல்பாடாக பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. சமூகத்தின் மையமாக சந்தைகள் இன்றும் இடம் பெற்றிருப்பது இதற்குச்சான்று.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் சொந்த உபயோகம் சார்ந்த பொருட்களை வாங்குவதிலேயே அதிக செலவு செய்கின்ற காரணத்தால் அவர்களை இலக்காக கொண்டே விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

காலங்காலமாய் ஆணாதிக்க மனோபாவத்தால் பெண் மற்றவரை சுண்டியிழுக்கும் கவர்ச்சிப் பொருளாகவே பாவிக்கப்பட்டு வருகிறாள். அதன் அடிப்படையிலேயே விளம்பரங்களில் பெண்கள் கவர்ச்சி பதுமைகளாக காட்சிப்படுத்தப்படுகின்றனர்.
பொதுவாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் பாலுணர்வைத் தூண்டும் வக்கிர உத்தியை விளம்பர நிறுவனங்கள் கையாள்கின்றன.

ஒரு புடவையை சாதாரணமாக காட்டினாலே ஒரு பெண்ணால் தேர்ந்தெடுக்க முடியும் என்ற சூழலில் ஏன் பல பெண்களை அணிய விட்டு விளம்பரப்படுத்துகிறார்கள்? இதன் உள்நோக்கம் என்ன?

பொதுவாக நம் சமூகத்தில் கணவரின் பணத்தைச் செலவழிக்க மனைவிக்கு முழு சுதந்திரமுண்டு எனும் எண்ணம் உண்டு. ஆனால், இது வசதி படைத்த குடும்பத்திற்கு மட்டும் பொருந்துமே தவிர நடுத்தர குடும்பத்திற்குப் பொருந்தாது. நடுத்தரக் குடும்ப மனைவிகள் பல வேளைகளில் தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ள கணவன்மார்களின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே சமூகத்தில் அதிகளவு இருக்கும் நடுத்தர குடும்பத்து மனைவிகளின் நுகர்வைப் பெருக்க அவர்களின் கணவன்மார்களை இலக்காக, அவர்களை ஈர்க்க விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன.

விளம்பரங்களில் பெண்களுக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்களே அதிகமாக இருக்கின்றன. இது ஒரு விதத்தில் நடுரோட்டில் குழந்தையைக் காட்டி பிச்சையயடுக்கும் தந்திரமே.
மழலை முகத்துக்கு மயங்காதவர் எவருமில்லை. இதை உணர்ந்தே விளம்பரங்கள் பெண்களுக்கு அடுத்தபடியாக குழந்தைகளைக் கொண்டு அதிகம் தயாரிக்கப்படுகின்றன.

உலகளவில் குழந்தைகளை ஆடை குறையுடனும், ஆடையில்லாமலும், குழந்தைத் தன்மையைச் சீரழிக்கும் விதமாக விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு அதிகளவில் ஒளிபரப்பப்படுகின்றன என 2007 ஆம் வருடம் “யுனிசெப்’ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

விளம்பரங்களில் வரும் குழந்தைகள் தங்கள் இயல்பு நிலையை மீறிய பெரியோர்களின் மனநிலையோடு பேச வைப்பது, உடையணிய வைப்பது போன்றவற்றால் அவர்களின் இயல்பு வாழ்க்கை சுரண்டப்படுகிறது. மீறி பேசவும், நடவடிக்கைகளில் ஈடுபடவும் விளம்பரங்கள் மூலம் கற்றுக் கொள்கிறார்கள்.

சினிமா, சீரியல்களின் தாக்கம் பற்றிய விவாதங்களும், விமர்சனங்களும் பெரிதுபடுத்தப்படும் இந்நாட்களில் விளம்பரங்களும் சமூகச் சீரழிவுக்கு துணை போகின்றன எனும் உண்மையை நாள்தோறும் ரசித்து குடும்பத்தோடு பார்க்கும் நாம் கசப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.

தூணிலும், துரும்பிலும் வியாபித்திருக்கும் விளம்பரங்களை உடலிலும், உணர்விலும் ஆளுகைச் செய்ய விடாமல் பார்த்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment