Sunday, February 19, 2012

OBC யில் உள்பிரிவுகள்: சல்மான் குர்ஷித்

இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் உட்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

“இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் உட்பிரிவுகளை வரையறுக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு. இது பட்டியலில் உள்ளடங்கியுள்ள அனைத்து சமூகத்தவர்களுக்கும் சம அளவிலான பலனைத் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

தனது வாதத்துக்கு ஆதரவாக ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், சச்சார் கமிட்டி ஆகியவற்றின் பரிந்துரைகளையும், மத்திய அரசுக்கு எதிராக இந்திரா ஷானே தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

உட்பிரிவுகளை வரையறுப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என்று கூறியுள்ள குர்ஷித், 28 மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சிப் பிரதேசங்களின் அரசுகள் தங்களுக்கென்று தனியான ஓ.பி.சி. மாநிலப் பட்டியலைக் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸின் அதிகாரப்பூர்வ இதழான சந்தேஷில் அவர் மேலும் தெரிவித்திருப்பது: 9 மாநிலங்கள் தங்களுக்கென்று தனியாக வைத்துள்ள ஓ.பி.சி. மாநிலப் பட்டியலில் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.

முஸ்லிம்களுக்கு பயன்தரும் வகையில் அவர்களுக்கென்று தனியான இடஒதுக்கீடு வேண்டும் என்று சச்சார் கமிட்டி தெரிவித்துள்ளது. சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களை மத்திய ஓ.பி.சி. பட்டியலில் சேர்த்துள்ள போதிலும், கடந்த 20 ஆண்டுகளாக அவர்களுக்கென்று தனியான ஒதுக்கீடு அவசியம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சிறுபான்மையினரில் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள். 27 சதவீத ஓ.பி.சி. ஒதுக்கீட்டில் அனைத்து முஸ்லிம்களையும் பொதுவாக உள்ளடக்கினால், அது முஸ்லிம்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை இனம்காணத் தவறிவிடும் என்று சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதோ அல்லது முஸ்லிம்களுக்குகென்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) என்ற தனியான பிரிவை உருவாக்குவதோ தான் சரியான முடிவாக இருக்கும் என்று சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாக குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அரசு வேலைவாய்ப்பிலும், கல்வி நிறுவனங்களிலும், சிறுபான்மையினருக்கு மத்திய அரசு அளித்துள்ள 4.5 சதவீத உள்ஒதுக்கீட்டை துரிதமாக நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சி தனது உத்தரப் பிரதேச் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்துக்கான ஓ.பி.சி. பட்டியலிலும் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் எம்.பி.சி. பட்டியலை உருவாக்குவோம் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சிறுபான்மையினருக்குத்தான் உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய ஓ.பி.சி. பட்டியலில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சிறுபான்மையினரால்தான் இடம் பெற முடியும்  என்றும் அந்தக் கட்டுரையில் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, நிரப்பப்படாமல் உள்ள எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment