முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கில் உள்ள சில அழகிய பழமொழிகளை இப்பதிவின் மூலம்
அறிமுகம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்.
‘பள்ளியைத் தின்ற குடி பற்றி
எரியும்’
‘பள்ளி’ என்ற சொல் பள்ளிவாசலுக்கு உரிமையான செல்வத்திற்கு ஆகி வந்தது
என்றும்,‘குடி’என்ற சொல்லுக்கு வம்சம்,மரபுவழி,குலம் என்று பொருள் உணர்ந்து
கொண்டால்,அப்பழமொழி உணர்த்தும் ஆழிய பொருளை நாம் அனுபவிக்க முடியும்.
“வாயில் ஓதல் இருந்தால் வழியெல்லாம்
சோறு”
ஓதல் என்ற சொல்லை,கல்வி என்று பொருள் கொள்ளலாம்.படித்தல் என்ற பொருளைத் தருகிற
‘ஓதுதல்’என்ற சொல்லை இஸ்லாமியர்கள் பேச்சு வழக்கில் மிக இயல்பாகக்
கையாள்கின்றார்கள்
“கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம்
சிறப்பு”
என்ற பொதுத்தமிழ் பழமொழியுடன் இப்பழமொழியின் பொருளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய
வாய்ப்புள்ளது.இதே தொனியில் உள்ள இன்னொரு இஸ்லாமியப் பழமொழி. “ஞானமும் கல்வியும் ஆணமும் சோறு” என்பதாகும்.
‘ஆணம்’என்பது இஸ்லாமியர்களிடம் மட்டுமே புழங்கும் ஒரு வழக்குச்
சொல்லாகும்.ஆணம் என்றால் கொழம்பு என்று பொருள்.
“பொதுவாக மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியம். மனிதர்களின் கல்வியும்,அறிவும்,முதலில் அவர்களது பசியைப் போக்க உதவி செய்வதாக இருக்க வேண்டும்” என்ற கருத்தை இப்பழமொழி வலியுறுத்துகிறது.
சிலர் நெஞ்சுக்கு நேரே நம்மைப் புகழ்ந்து பேசுவார்கள்.அதே ஆள்,நம்
முதுகுக்குப் பின்னே நம்மைத் தூற்றுவார்கள்.இந்த வாழ்வியல் நடைமுறையை , “கண்டா சாயுபே,காணாட்டி பாவியே” என்ற பழமொழிச் சுட்டிச்
சொல்கிறது.
தொழுகையாளிகள் எதார்த்த வாழ்வில் நேர்மையுடன் வாழ வேண்டும் என்ற
கருத்தை
“தொழுகிறான்,தொழுகிறான் அல்லாஹ்வுக்காக,வைக்கோலை
களவாடறான் மாட்டுக்காக!’
என்ற பழமொழி விளக்குகிறது.இப்பழமொழியில் ‘அங்கதச் சுவை’ அமைந்துள்ளது.
‘தொழாதவனின் ‘கிப்லா’ எல்லாத் திக்கிலும்’
என்கிறது இன்னொரு பழமொழி.திக்கு- என்ற வாட்டார வழக்கு சொல்லுக்கு ‘திசை’
என்பது பொருள். ஒரு முஸ்லிம் உலகத்தில் எந்த மூலையிலிருந்தும் இறைவனைத்
தொழுதாலும்,தொழுகின்ற ஒவ்வொருவரும் ‘கிப்லா’ கஅபாவை
முன்னோக்கி நின்றுதான் தொழுவார்கள்.
இறைவனை நம்புகிறவர்களுக்கும்,தொழுகையைக்
கடைப்பிடிக்கிறவர்களுக்கும் தான் ‘கிப்லா’வின் திசை தெரியும்...! இறைநம்பிக்கை
இல்லாதவர்களுக்கு, கிப்லாவின் திசையைப் பற்றி கவலை இல்லை என்பது இப்பழமொழி விளக்க
வரும் பொருளாகும்.
‘பிறவிக் குணத்திற்கு மட்டை வைத்துக் கட்ட முடியுமா?’’ என்று கேட்கிறது ஒரு
தமிழ் பழமொழி.இதே கருத்தை அடியொட்டி,
‘அரபிக் குதிரை என்றாலும் பிறவிக் குணம்
போகாது’ என்கிறது ஒரு இஸ்லாமியப் பழமொழி.
சில பழமொழிகளைக் கேட்கிற போது நமக்குச் சிரிப்பு வந்து விடுகிறது.
“உள்ளது ஒரு பிள்ளை என்று ஒண்பது தடவை சுன்னத்
செய்தானாம்!”
என்ற பழமொழியில் நகைச்சுவை உணர்வு உள்ளது.
சகோதரச் சமுதாயத்தினரின் பேச்சு வழக்கில்
“அப்துல் காதருக்கும்,அமாவாசைக்கும் என்ன
சம்பந்தம்” என்பது போன்ற வழக்கு வழக்குத் தொடர்கள் பயன்படுத்தப்
படுகின்றன.
அல்லாஹ்வை வணங்கினால், இம்மை -மறுமை இரண்டிலும் நன்மை கிடைக்கும் எனது
இஸ்லாமியர்களின் நம்பிக்கை.இக்கருத்தை,
“அல்லாஹ்வைத் தொழுதால்-ஆகிரமெல்லாம் சொர்க்கம்
தான்!”
என்கிறது ஒரு பழமொழி.ஆகிரம் என்றால்
‘மறுமை’யாகும்.
No comments:
Post a Comment